250இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும்
வவுச்சர்களுக்குப் பதிலாக, தரமான, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாடசாலை பாதணிகளை
வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது.
தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று (06.11.2025) நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர், இந்தத் திட்டம்
மேல், தென் மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளின் 145,723 மாணவர்களை
உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியின் கீழ், உள்ளூர் பாதணி உற்பத்தியாளர்கள் ஒரு வருட
உத்தரவாதத்துடன் தரமான பாதணிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
140 மில்லியன் ரூபாய்கள்
இதற்காக ஒரு ஜோடி பாதணிக்கு அவர்கள் 2,100 ரூபாய் மட்டுமே வசூலிக்கின்றனர்.
இதன் மூலம் கிட்டத்தட்ட அரசு 140 மில்லியன் ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணத்தை குறித்த மாகாணங்களில், மேலதிகமாக 62,481 மாணவர்களுக்கு பாதணிகளை
வழங்க பயன்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
