வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 15 வங்கிகள் ஏற்கனவே 1.5 மில்லியன் ரூபாய் வரை கடன் வசதிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதித் துறையின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
இதன் கீழ், கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாத கால அவகாசத்துடன் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கிடைக்கும் எனவும் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8% மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தொடர்புடைய கடன் வசதிகளை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, தேசிய மேம்பாட்டு வங்கி, செலான் வங்கி, பிராந்திய மேம்பாட்டு வங்கி, DFCC, சனச அபிவிருத்தி வங்கி, பான் ஆசியா வங்கி, யூனியன் வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கி மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.
சிறப்பு அம்சம்
அத்துடன், இதன் சிறப்பு என்னவென்றால், நிலம் மற்றும் பிற சொத்துக்களை பிணையமாக வழங்காமல் கடன்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றை முறையாகச் செலுத்தி வரும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் 10 ஆண்டுகள் வரை 7% குறைந்த வட்டி வீததில் கடன்களைப் பெறலாம் எனவும் அவர்கள் 25 மில்லியன் வரை கடன் பெறலாம் என்றும் ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் ஒரு வருட சலுகைக் காலமும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
