Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான தருணத்தில் ஆட்சிக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்காமல், நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இமிதியாஸ் பாக்கீர் மார்க்கர் தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் போது, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறு நீண்டகாலமாக வலியுறுத்திய போதிலும் அது பலனளிக்கவில்லை என தேரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் நலன்
அதிகாரத்தை நாடாமல், நாட்டு நலனுக்காக அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதே காலத்தின் தேவையாகும்.
அரசியல் கட்சிகளின் நலனில் அக்கறை காட்டாமல், மக்கள் நலனே முதன்மையாக இருக்க வேண்டும்.
முன்னரைப்போன்று அரசியல்வாதிகள் இனி பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.
தேர்தல்களின் போது எப்படி சரியான முடிவுகளை எடுப்பது என்பது பற்றி மக்கள் இப்போது நன்கு உணர்ந்துள்ளனர் என்று மகாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, கருத்துரைத்த இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், நாட்டின் நிலைமையை முழுமையாக புரிந்து கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முற்போக்கான முயற்சிகள்
பிரான்சில் ஜனாதிபதியும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கும் இதே போன்ற அனுபவங்கள் உள்ளன.
எனவே, ஜனாதிபதியின் முற்போக்கான முயற்சிகளுக்கு தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகள் தீவிர இடது அல்லது வலதுசாரி சித்தாந்தங்களை கைவிட்டு பொதுவான கொள்கைகளை தேர்ந்தெடுத்துள்ளன என்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இதன்போது தெரிவித்துள்ளார்.