மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
அதே போல் குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இப்படத்தையும், விஜய் சேதுபதியையும் எப்படி கையாண்டு இருப்பார் என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தனர்.
இப்படி பல எதிர்பார்ப்புகள் மகாராஜா மீது இருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு இப்படம் பூர்த்தி செய்துள்ளது என விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கதாநாயகன் விஜய் சேதுபதி {மகாராஜா} சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவியின் இறப்புக்கு பின் தனது மகளை வளர்த்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு செல்லும் விஜய் சேதுபதி தனது வீட்டில் இருந்து லட்சுமி காணாமல் போய்விட்டது என புகார் அளிக்கிறார்.
லட்சுமி என்பது என்ன? விஜய் சேதுபதி வாழ்க்கையில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் என்ன? இதை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா? விஜய் சேதுபதியின் உண்மையான நோக்கம் என்ன? எதற்காக அவர் காவல் நிலையத்திற்கு வருகிறார்? என்று விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதே படத்தின் மீதி கதை.
வசூல் வேட்டையை நடத்தவிருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா!! முதல் நாள் வசூல் கணிப்பு..
படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் நித்திலன் நேர்த்தியாக கதைக்களத்தை கையாண்டுள்ளார். சிறிதளவு பிசிறு தட்டினாலும் கதை புரியாமல் போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அனைவருக்கும் புரியும்படி எடுத்துள்ளார் இயக்குனர் நித்திலன்.
திரைக்கதையில் விளையாடிய விதம் அருமை, அதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். மேலும் அது ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தையும் கொடுக்கிறது. மம்தா மோகன்தாஸை தவிர்த்து மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் வலுவாக வடிவமைத்துள்ளார்.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள், இடைவேளை காட்சி, காவல் நிலையத்தில் நடக்கும் அலப்பறைகள், நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள், சமுதாய அக்கறையோடு சொல்லப்பட்ட விஷயங்கள் என பல இடங்களில் பட்டையை கிளம்பிவிட்டார் இயக்குனர் நித்திலன்.
இயக்குனருக்கு அடுத்தபடியாக எடிட்டிங் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். நாம் எந்த வகையிலும் கதையை விட்டு வெளியே போகாத அளவிற்கு எடிட் செய்துள்ளனர். அதுவும் எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் ரசிக்கும்படியாக செய்த விதம் வேற லெவல்.
கதாநாயகன் விஜய் சேதுபதி தனது 50வது திரைப்படத்தை தரமான படமாக நமக்கு கொடுத்துள்ளார். லட்சுமி குறித்து பேசும் காட்சிகள், மகளுடனான செண்டிமெண்ட் காட்சிகள், ஆக்ஷன், வெகுளித்தனமான நடிப்பு என ஸ்கோர் செய்கிறார்.
விஜய் சேதுபதிக்கு இணையான நடிப்பை கொடுத்துள்ளார் அனுராக் காஷ்யப். ஆனால், அவருக்கு டப்பிங் இன்னும் நேர்த்தியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும். நட்டி நடராஜ், சிங்கம் புலி, அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், முனீஸ்காந்த், அபிராமி என அனைவரும் தங்களது பங்கில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. இதில் நடிகை மம்தா மோகன்தாஸின் கதாபாத்திரம் மட்டும் வலுவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்கனிகள் விஷயங்களிலும் பெரிதளவில் குறை எதுவும் இல்லை. ஒளிப்பதிவு – காட்சிகளை அழகாகவும், நமக்கு புரியும்படியும் படத்தை நகர்த்திச் செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ‘கால் தடத்தில் வந்து சேரும் இரத்ததிற்கு செய்திருந்த ஒளிப்பதிவு அருமை. அதற்கு மிகப்பெரிய பாராட்டு. மேலும், அஜனீஷ் B லோக்நாத்தின் பின்னணி இசை பக்கா.
பிளஸ் பாயிண்ட்
இயக்குனர் நித்திலன் இயக்கம், திரைக்கதை
எடிட்டிங்
விஜய் சேதுபதி நடிப்பு
அனுராக் காஷ்யப், மற்ற நடிகர்களின் நடிப்பு
ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
நடிகை மம்தா மோகன்தாஸ்-க்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லாதது