அண்மைக்காலமாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் தனது நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தங்காலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக வசித்து வந்த நிலையில் மீண்டும் கொழும்பில் குடியேறியுள்ளார்.
நுகேகொட பகுதியில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் மகிந்த ராஜபக்ச வசித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரான வழக்கறிஞர் மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
மகிந்தவின் மாற்றத்திற்கான காரணம்
செப்டம்பர் 11 ஆம் திகதி, மகிந்த ராஜபக்ச கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்தார்.
எனினும் அவர் ஒரு வாரத்திற்கு முன்பு நுகேகொட பகுதியில் உள்ள ஒரு இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை
மகிந்த ராஜபக்ச கொழும்பு இல்லத்திற்குத் திரும்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக வழக்கறிஞர் மனோஜ் கமகே கூறினார்.
கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கும் கொழும்பிற்கு அருகில் இருப்பதன் வசதி என அவர் குறிப்பிட்டுள்ளர்.
முன்னாள் ஜனாதிபதி தற்போது நுகேகொட இல்லத்தில் இருந்து தனது அரசியல் சகாக்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
