Home இலங்கை அரசியல் வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராக டயஸ்போராக்கள் செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத கொள்கையுடையவர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபய ராஜபக்ச ஆகியோர் கடுமையான தீர்மானங்களை எடுத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உறுதியான தீர்மானத்தை எடுத்ததால் தான் இந்த நாட்டில் ஜனநாயகம் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வெற்றிப் பெற முடிந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜபக்சர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை ஒப்பிட முடியாது.

டயஸ்போராக்களும், பிரிவினைவாத கொள்கையுடையவர்களும் இன்றும் ராஜபக்சர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version