Home முக்கியச் செய்திகள் கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! யாழில் சிக்கிய மற்றுமொரு சந்தேகநபர்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! யாழில் சிக்கிய மற்றுமொரு சந்தேகநபர்

0

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் காரில் பயணித்த போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.

காரில் இருந்த பொருட்கள் 

காரில் இருந்து வாள், 5000 வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த கார் போலி இலக்க தகடு கொண்ட கார் என காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில்
இயங்கும் வன்முறை கும்பல்களுடனும் தொடர்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை

முப்பது வயது மதிக்கத்தக்க சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள், போலி இலக்க தகடு, ஆயுதம், போதைப்பொருள் என்பனவற்றுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் அதன் பின்னர் கொழும்பு விசேட காவல்துறை குழுவினரிடம் சந்தேக நபரை ஒப்படைக்கவுள்ளனர்.

இதேவேளை கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறை குழுவால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version