Home முக்கியச் செய்திகள் பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் இன்று முதல் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் (M. Udayakumar) தெரிவித்துள்ளார்.

அவருடைய விலகல் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பில் வசிக்கும் மாணிக்கம் உதயகுமார் ஆகிய நான் தமிழரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினராவேன். எனது பெற்றோரும், உற்றார், உறவினர்களும் இக்கட்சியின் ஆதரவாளர்களும், பற்றாளர்களுமே.

அரச அதிபர் பதவி

நான் 2020ஆம் ஆண்டு பிள்ளையான், வியாழேந்திரன் போன்ற அரசியல்வாதிகளினால் பழிவாங்கலுக்குட்பட்ட போது நான் அப்போது வகித்த மட்டக்களப்பு அரச அதிபர் பதவியை தூக்கியெறிந்து தமிழரசுக் கட்சியின் முழுநேர அங்கத்தவனாக செயற்பட்டவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட எனக்கு எமது தமிழ் மக்கள் 21,999 விருப்பு வாக்குகளை வழங்கியதன் மூலம் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு பிரதிநிதித்துவத்தைப் பெற பெரும் பங்காற்றியிருந்தனர்.

எனினும் இதனை இன்று ஒருசிலர் தமது தனிப்பட்ட வெற்றியாகக் கருதி தன்னிச்சையாக செயற்படுகின்றனர்.

எனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்களது கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட 2024/9/29ம் திகதிய கடிதத்திற்கமைய எனது விருப்பினைத் தெரிவித்திருந்தேன்.

இருந்த போதும் மாவட்டத்தில் இதுவரை, தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் என்னைத் “தெரிவுக் குழு” தெரிவு செய்யாமை எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சாணக்கியனின் கை பொம்மை

மேற்படி தெரிவுக் குழுவில் அங்கத்துவம் வகிப்பவர்களது தெரிவும் ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை. ஓர், இருவரது தெரிவுக்கும், தேவைக்கும் ஏற்ற வகையிலேயே இத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது பலரது கருத்தாகும் என்பதைத் தெரியப்படுத்த

வேண்டிய தேவை எழுகிறது.

தெரிவுக் குழுவில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்

செய்தவர்களே அதிகமாக இடம்பெற்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அங்கத்தவர்களில் நால்வரில் இருவர் வேட்பாளர்களாவர். அத்துடன் அவர்கள் அனைவரும் சாணக்கியனவர்களின் கை பொம்மைகளே.

மேலும் மாவட்டத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக எந்த ஒரு மட்டத்திலும் கலந்துரையாடப்படவோ அல்லது அறிவிக்கவோ இல்லை. சாணக்கியன், சரவணபவன் ஆகியோர் தமக்கு வெற்றிக்கு சாதகமான வகையிலேயே வேட்பாளர்களை மாவட்ட மட்டத்தில் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாகவும், தெரிவுக் குழுவினை ஸ்தாபிக்கும் போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை குழுவில் உள்ளடக்க வேண்டாம் எனவும் தெரிவுக் குழுவுக்கு பக்கச்சார்பற்ற, நேர்மையான அங்கத்தவர்களை இணக்குமாறு தங்களை தங்களது இல்லத்தில் 25/9/2024 அன்று சந்தித்தபோது வலியுறுத்தியிருந்தோம். எனினும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

கட்சியிலிருந்து விலகுதல் 

வேட்பாளர் தெரிவின் போதும் அதன் தலைவர்/செயலாளர் ஆகியோரை பலமுறை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அவை கைகூடவில்லை என்பதனையும் இருமுறை தலைவர் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக இவ்விடயத்தை அறிவித்திருந்தேன் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்ட கட்சியின் தலைமையினாலும் சில உறுப்பினர்களாலும் நானும் எனது ஆதரவாளர்களும் பலமுறை புறக்கணிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பதனையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்று தீர்க்கதரிசனத்துடன் தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட எமது தமிழரசுக் கட்சி என்ற புனித இயக்கமானது இன்று நயவஞ்சகர்கள் சிலரின் கூடாரமாக மாறியுள்ளமை கவலையளிக்கிறது.

கட்சியின் கொள்கைகளை மதிக்கின்ற எமது தமிழ் மக்கள், தொண்டர்கள், ஆதரவாளர்களை இக்கூட்டத்தினருடன் இணைந்து பயணித்து ஏமாற்ற இனிமேலும் எனது மனம் இடம் தராமையினால், கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் இன்று முதல் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளமையினைக் கவலையுடன்

அறியத்தருகிறேன்.

இதுவரை காலமும் தங்களால் வழங்கப்பட்ட ஆதரவையும், அன்பையும் பெரிதாக

மதிக்கிறேன்.“ என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version