Home இலங்கை அரசியல் தமது கட்சியினர் மீதான தாக்குதல் குறித்து மணிவண்ணனின் நிலைப்பாடு

தமது கட்சியினர் மீதான தாக்குதல் குறித்து மணிவண்ணனின் நிலைப்பாடு

0

எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க
முடியாது என யாழ். தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வி. மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று பெண்கள் உள்ளிட்ட
08 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் 

அதில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாகும். சமாதானமான
அமைதியான தேர்தலுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கின்றோம்.

மான்
சின்னத்தில் போட்டியிடும் எங்களை முடக்குவதற்காக திட்டமிட்டே எம் மீது
தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வன்முறை கும்பல் ஒன்றினால் பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு துரதிஷ்டவசமாக எந்த பெண்கள் அமைப்புக்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

அதேவேளை சட்டத்தையும் அமைதியையும் விரும்புகின்றவர்களும், எந்தவொரு அரசியல்
கட்சிகளும் இந்த எம்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனம்
தெரிவிக்கவில்லை.  எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க
முடியாது” என தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை
கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள்
கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில்
முற்படுத்திய நிலையில் மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தது.

வைத்தியசாலையில் அனுமதி 

கடந்த சனிக்கிழமை நீர்வேலி பகுதியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான்
சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரசார நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய கும்பல்
தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்று, மீண்டும் சுமார் 30 பேருடன்
வந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

அதில் பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம்
சாட்டப்படும் தரப்பினரும் பரஸ்பர முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில்
வழங்கியிருந்தனர்.

அதனை அடுத்து பொலிஸார், தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு
வைத்தியசாலையில் கட்டிலுடன் கைவிலங்கிட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான மூவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்டனர் என
குற்றம் சாட்டப்பட்ட ஐவர் என 08 பேரையும் யாழ். நீதவான் நீதிமன்றில்,
இன்றைய தினம் திங்கட்கிழமை கோப்பாய் பொலிஸார் முற்படுத்தினர்.

அதன்போது தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி வி.
திருக்குமரன் தலைமையில், 12 சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, அனைவரையும் பிணையில்
செல்ல அனுமதித்த மன்று, வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு
ஒத்திவைத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version