Home இலங்கை அரசியல் சத்தியலிங்கம் குறித்த தமிழரசு கட்சியின் தீர்மானம்: மன்னாரில் கடும் எதிர்ப்பு

சத்தியலிங்கம் குறித்த தமிழரசு கட்சியின் தீர்மானம்: மன்னாரில் கடும் எதிர்ப்பு

0

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசியபட்டியல் ஆசனத்தை ஊழல்
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சத்தியலிங்கத்திற்கு வழங்குவதாக கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு மன்னார் உட்பட பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ப. சத்தியலிங்கம் 4033 வாக்குகளையே பெற்று தோல்வியுற்றுள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கே தேசிய பட்டியலை வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்திருந்தார். 

சுமந்திரனின் பின்புலத்தில் சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம்
வழங்குவதற்கான செயல்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த
இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 

தேசிய பட்டியல் 

முன்னதாகவே, மாகாண சபை ஆட்சி காலத்தில்
சுகாதாரதுறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த
சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல
விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

குறிப்பாக சத்தியலிங்கம் இம்முறை தேர்தலில் வெறும் 4033 வாக்குகளை மாத்திரம்
பெற்றிருந்தார். அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம்
சட்டத்தரணியான செல்வராஜ் டினேசன் தனது முதலாவது தேர்தலில் 6518 வாக்குகளை
பெற்றுள்ளார்.

மக்களின் நிலைப்பாடு

ஆனால், தகுதிவாய்ந்த அவருக்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்து பல கோடிகள் செலவு செய்து
தனது பிள்ளைகளை ரஷ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வன்னியில் வாக்குகள்
குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல்
ஆக்குவதற்கு சத்தியலிங்கம் போன்ற ஊழல்வாதிகளுக்கு சுமந்திரனின் உதவியுடன்
தேசிய பட்டியல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு தமிழரசு கட்சி
ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள்
உட்பட பலர் எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version