மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்ட ஒரு
மாதகால அவகாசம் ஜனாதிபதி வழங்கியுள்ளார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின்
பிரதிநிதிகளுக்கும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் இல்மனைட்
அகழ்வு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
ஒரு மாதகால அவகாசம்
இந்த சந்திப்பை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சந்திப்பின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் காற்றாலை மின் உற்பத்தி
நிலையத்தினால் ஏற்பட போகும் பாதிப்புகள் மற்றும் இல்மனைட் அகழ்வினால்
ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி
இருந்தார்கள்.
இதன்போது, ஜனாதிபதியினால் காற்றாலை மின் உற்பத்தியினால் பெறப்படுகின்ற
மின்சாரத்தின் தேவை தொடர்பிலும் ஏனைய பொருட்களின் மூலமாக பெறப்படுகின்ற
மின்சாரத்தினால் ஏற்படுகின்ற செலவுகள் தொடர்பிலும்
தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்துடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ
வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இல்லையேல் 2028 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மின்சார நெருக்கடியை நாடு எதிர்நோக்க
வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதனால் ஏற்பட போகும் பாதிப்புகள் இருக்குமாயின் அது விஞ்ஞான ரீதியாக எவ்வாறான
பாதிப்புகளாக அமையும் என்பது தொடர்பிலும் கரிசனையுடன் கேட்டறிந்தார்.
காற்றாலை மின் உற்பத்தி நிலையம்
அத்துடன்
அவ்வாறான பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அதனை எவ்வாறு நிவர்த்தித்து
பாதிப்புகள் ஏற்படாத வகையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது
தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டிய தேவை தொடர்பிலும்
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் தேவை தொடர்பிலும் மக்களுக்கு
தெளிவூட்டல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணித்திருக்கின்றார்.
அத்துடன் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற 70 மெகாவோட்ஸ் மின்சாரத்துக்கு
மேலதிகமாக காற்றாலைகள் மன்னார் தீவு பகுதிக்குள் அமைக்கப்படாது எனவும் மேலும்
அமைக்கப்படவுள்ளதை தீவுப்பகுதிக்கு அப்பால் உள்ள பிரதேசங்களை அடையாளம் கண்டு
அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சூழலுக்கு பாதிப்பு
அத்துடன், இல்மனைட் அகழ்வு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டிருந்தது.
இதுவரை இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும்
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சூழல்
ஆய்வுகளை மேற்கொண்டு பெறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்ததோடு அதனை
தற்காலிகமாக நிறுத்த அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட
உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மக்களுக்கு விருப்பம் இல்லாத சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த
விடயங்களையும் செயல்படுத்த போவதில்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது
தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் மின்சக்தி எரிசத்தி அமைச்சர், சுற்றுச்சூழல்
பிரதி அமைச்சர், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மின்சார
சபையினர், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனத்தினர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகளின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
