எதிர்வரும் நாட்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஐவர் கைது செய்யப்படலாம் என்று அரசாங்கத்துக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கைது செய்யப்பட உள்ளோர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
பிணைமுறி மோசடி
எனினும், குறித்த தகவல் எப்படியோ அவருக்கு கசிந்துள்ள நிலையில், அவர் குடும்பத்துடன் நாட்டை விட்டும் தப்பியோடிவிட்டார். சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய முக்கிய துறைகளில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலர் சுதந்திர தினத்துக்கு முன்னதாக கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் மனைவியும் இந்தப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்த நல்லாட்சிக்காலத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தப்பித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிரான விசாரணைகள் தற்போதைக்கு தீவிரம் பெற்றுள்ளன.
அதே போன்று பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளும் தற்போது தூசுதட்டப்பட்டு, துரித கதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.