இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய
அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர்,
“செந்தமிழ்ச் சொல்லருவி” சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார்.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை
நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது
நேற்றையதினம் (2) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர்
அரங்கில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்து தத்துவ நெறியிலே எமது முன்னோர்கள் யுகங்களை, கிருத யுகம், திரேத யுகம்,
துவாபர யுகம், கலியுகம் என நான்காக வகுத்தார்கள். இப்போது நடைபெறுவது
கலியுகம். தலைமுறைகள் பற்றியும் சொன்னார்கள்.
குடித்தொகை பெருக்கம்
1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள்.
அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர்
முடிவடைந்தது.
இதன்காரணமாக உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது,
உலகத்திலே மக்கள் தொகை குறைந்து விட்டது என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க
வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழுந்தது. அந்த கோஷம் யாழ்ப்பாணத்திலும் ஒலித்தது.
அந்த சந்தர்ப்பத்தில் தான் மிதமிஞ்சிய அளவில் பிள்ளைகளை பெற்றார்கள்.
1945 -1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு வீட்டில் 10,12 பிள்ளைகளை
பெற்றார்கள்.
அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இலங்கையின்
குடித்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்தன. ஒரு
காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்.
வீழ்ச்சி
தற்போது ஐந்தரை
இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர்
தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள்.
இங்கே, நாம்
இருவர் நமக்கிருவர் என்ற காலம் போய், நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று
கேட்கின்ற காலம் வந்துவிட்டது.
குறிப்பாக தமிழர்களின் குடித்தொகை பெருக்கமானது குறைந்திருக்கிறது.
இஸ்லாமியர்களின் குடித்தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது.
தமிழர்களது குடித்தொகை பெருக்கமானது 11.5 வீதத்திலேயே உள்ளது.
தமிழர்களின்
குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக உயர்கிறது என்று சொல்கின்ற அளவிற்குகூட
இல்லை எனத் தெரிவித்தார்.
