தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் மூலம் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் காலத்தின் தேவை கருதிய சிறந்த நகர்வு என வடக்கிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறிலங்காவில் கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவில்லை என வடக்கு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
லங்காசிறியின் மக்கள் கருத்து நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் பொது வேட்பாளர்
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள் “ தமிழ் தேசிய பொதுமக்களுடைய திரட்சியை வெளிப்படுத்துவதற்காகவும் ஒற்றுமையை நிலை நாட்டுவதற்காகவும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம்.
தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என நேரடியாக கூறுகின்றவர்களை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் புறக்கணிக்கின்றோம் என்ற பெயரில் வேறு பலரின் வெற்றிக்காக பாடுபடும் புல்லுருவிகளுக்கு இந்த தேர்தல் நல்ல ஒரு பாடத்தை புகட்டும்.
காலத்தின் கட்டாயமாக இந்த பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்திற்கு பின்னர் அரசியல் ரீதியாக தமிழ் மக்களுடைய கருத்தியல் நீர்த்துப்போய் விட்டதாக பல விசஜந்துக்கள் தங்களுடைய சொந்த அரசியலுக்காக தவறான பரப்புரைகளை செய்கின்றார்கள்.
ஆளும் கட்சியில் மட்டுமன்றி தமிழ் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு கூட சிலர் இங்கு சுற்றுகின்றார்கள். அவர்களுடைய கருத்தியலை நாங்கள் பொய்யாக்க வேண்டும். தமிழ் மக்களுடைய உணர்வு என்றுமே மங்கவில்லை என்பதைக் காட்டுதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள்
தமிழ் தேசிய அரசியல் பரப்பிலே இயங்கிய தமிழரசுக் கட்சியினருக்கு இனத்தின் ஒற்றுமைக்காக தேசியத்தின் வெற்றிக்காக வேண்டி ஜனாதிபதி தேர்தலில் வேலைசெய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். இதனூடாக ஒன்றுபட்ட தமிழ் தேசிய வெற்றியைப் பெறுவதற்கு நீங்களும் பங்களிக்க வேண்டும்.
இந்த முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமானது.
சர்வதேச ரீதியில் உற்றுநோக்கி கொண்டிருப்பதால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்கு நாங்கள் எல்லோரும் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள்.
தமிழ் மக்களுக்குள்ளே பல தமிழ் கட்சிகள் உருவாகி அவை இன்று பிளவுபட்டுள்ளன. எந்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று தெரியாமல் தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்.“ என தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/embed/hIk889TuTaI