புதிய இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதனையடுத்தே மாவை சேனாதிராஜா கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் கலை அமுதன் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
எனினும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை இறுதி பட்டியலை நியமனக்குழு நேற்று (6.10.2024) வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் புதுமுகங்கள் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) சார்பானோருக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முக்கியஸ்தர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை
இதைத் தொடர்ந்து கட்சியின் இந்த முடிவு தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அதிருப்தியில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கட்சித் தலைமைக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.