Home ஏனையவை வாழ்க்கைமுறை மக்களின் முடிவால் ஏற்படுள்ள ஆபத்து – வழங்கப்பட்டுள்ள உடனடி உத்தரவு

மக்களின் முடிவால் ஏற்படுள்ள ஆபத்து – வழங்கப்பட்டுள்ள உடனடி உத்தரவு

0

தடுப்பூசி குறித்து நிலவும் தவறான மனப்பாங்கினால் தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் எடுக்கும் முடிவால் 9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகள் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குடும்ப சுகாதாரப் பணியகம் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் வைத்தியர் அத்துல லியனபத்திரண கூறுகையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றானது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதே தவிர, 2023ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய தட்டம்மை பரவலுடன் தொடர்புடையது அல்ல.

சோதனைகள் மூலம் உறுதி

ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் தட்டம்மைக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் தடுப்பூசி குறித்து நிலவும் தவறான மனப்பாங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் காரணமாகவே இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கூறுகையில், முகநூல் போன்ற தளங்களில் பரப்பப்படும் போலித் தகவல்களால் பெற்றோர் தடுப்பூசியைத் தவிர்க்கின்றனர்.

சிங்கள மொழியில் தடுப்பூசி மற்றும் சாதாரண ஊசி மருந்துகளுக்கு ஒரே பதம் பயன்படுத்தப்படுவது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஆபத்தான நிலை

இதேவேளை 20 முதல் 34 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, வைரஸ் பரவுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது தடுப்பூசி போட முடியாத 9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்தாக அமையும்.

தடுப்பூசி பெறத் தயங்கும் குடும்பங்களுக்கு விசேட குழுக்கள் மூலம் தெளிவூட்டல்கள் வழங்கப்படுகின்றன.

காய்ச்சல் மற்றும் தடிப்பு அறிகுறிகளுடன் வரும் நோயாளர்களை உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்க தனியார் மற்றும் பொது மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் தடுப்பூசிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் 6 மாதங்களுக்கும், மாவட்ட மட்டத்தில் 3 மாதங்களுக்கும் தேவையான மேலதிக கையிருப்புகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/measles-outbreak-threat-health-department-1777189425

NO COMMENTS

Exit mobile version