ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (19.11.2025) மதியம் ஒரு மணிக்குக் கொழும்பில் (Colombo) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு
தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்.
மற்றும் திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.
பேச்சுக்கான நல்லெண்ண சமிக்ஞையாக வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்றும் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
