சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பொது மக்களினால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்திய பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சுகாதார பணிப்பாளர்
வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தளவான சந்திப்பு
அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.