Home இலங்கை அரசியல் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நேற்றையதினம் (16.11.2024) அனுப்பப்பட்டுள்ளதாகத் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 18 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அந்த கட்சியினால் தெரிவுசெய்யப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்றையதினம் (17.11.2024) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதிநிதிகள் நியமனம்

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், அதற்கான தமது பிரதிநிதிகளை நியமனம் செய்யும் பணிகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், இதற்காக நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

இதனிடையே சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அக்கட்சியின் பொதுச் செயலாளரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல்

அதேநேரம், சர்வஜன அதிகாரம் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளையதினம் (18.11.2024)தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நியமிக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்று அல்லது நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

NO COMMENTS

Exit mobile version