Home இலங்கை அரசியல் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல்

0

தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு
வந்த இரா .சம்பந்தன் , தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை
அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினரட, தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார்.

இரா .சம்பந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியிலேயே இதனை  தெரிவித்துள்ளார்.

மேலும், “தேர்தல் அரசியலில் ஈடுபடும் வாய்ப்புகள் பல தடவைகள் தந்தை செல்வா அவர்கள்
மூலம் கிடைக்கப் பெற்றபோதும் அவற்றைத் தவிர்த்து வந்த அதேநேரம், தமிழ்
மக்களால் நடாத்தப்பட்ட அறவழிப் போராட்டங்கள் பலவற்றிலும் முன்னின்று
போராடியிருந்தார்.

1961 ஆம் ஆண்டில் எனது தந்தையார் உள்ளிட்ட பல தமிழரசுக்கட்சித் தலைவர்களின்
பங்குபற்றுதலுடன், தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற
சத்தியாக்கிரகப் போராட்டத்திலேயே சம்பந்தன் அவர்களுடன் இணைந்து செயற்படும்
வாய்ப்பு முதல் முதலாக எனக்கு கிடைத்தது.

போராட்டப் பாதை

எனது தந்தையாருடன் அவருக்கிருந்த
பலமான நட்புறவு காரணமாக எனக்கும் அவருக்குமான உறவு அன்றைய நாள் தொட்டு
சிறப்பானதாகவே அமைந்திருந்தது.

ஆயுதப் போராட்ட அமைப்புகளாக எமது போராட்டப் பாதை மாறுபட்ட தடத்தில்
சென்றபோதும் கூட அவருடனான நட்புறவு என்றும் தொடர்ந்திருந்தது.

1985 ஆம் ஆண்டு பூட்டான் தேசத்து திம்பு நகரில் தமிழ் அமைப்புகளுக்கும்
சிறீலங்கா அரசிற்கும் இடையே நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தையின் போது,
இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்களில் வெளிப்படுத்த வேண்டிய ஆளுமை நிறைந்த
அணுகுமுறைகள் பற்றி அவரிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

அத்தகைய அவரது திறமை மற்றும் பண்பு, பின்வந்த காலங்களில், குறிப்பாக
யுத்தத்தின் பின்னர் தமிழ்ச் சமூகத்தின் குரலாக, தென்னிலங்கை சமூகம் மற்றும்
சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர் அங்கீகாரம் பெற காரணமாயின.

தான் வரிந்து கொண்ட கொள்கைக்காக, எதிரிகளும் நிராகரிக்க முடியாத வகையில்,
ஆணித்தரமாக ஆளுமை நிறைந்த வகையில் வாதங்களை முன்வைப்பதற்கு அவர் என்றைக்கும்
தயக்கம் காட்டியதில்லை.

சக நாடாளுமன்ற உறுப்பினராக பல தடவைகளில் நான் அதனை
கண்டுணர்ந்திருக்கிறேன்.” என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

செய்தி – கஜி

ரிஷாட் பதியுதீன் 

மேலும், தமிழ் தேசிய அரசியலை கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து,
சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த மிதவாத தலைவர் சம்பந்தன் ஐயா என அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது,

“விடுதலை அரசியலில் சிறுபான்மைச் சமூகங்களை சம பார்வையுடன் நோக்கிய தலைவர்
சம்பந்தன் ஐயா.

நீண்ட அரசியல் வரலாற்றனுபவமுள்ள இவர், தமிழ் தேசிய அரசியலை மிக
சாதுர்யமாக வழிநடத்தினார்.

ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், கெடுபிடியான காலங்களில் கூட
தமிழ்த்தேசிய அரசியல் விலை போகாமல் பாதுகாக்கப்பட்டது.

தொண்ணூறு வயதைக்
கடந்திருந்தாலும் தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது.

ஒரே வாழிடத்தில் ஒரே மொழி பேசுவோராக வாழ்ந்த சிறுபான்மைச் சமூகங்களை, சம
பார்வையில் நோக்கிய பெருந்தகையும் இவர்தான்.

தமிழ், முஸ்லிம் முரண்பாடுகள் ஒரு
மொழித் தேசியத்தை (தமிழ்) சிதைக்கக் கூடாது என்பதற்காக முஸ்லிம் தலைமைகளுடன்
நல்லுறவை பேணி வந்தார்” என பதியுதீன் கூறியுள்ளார்.

செய்தி – ஆசிக

அரசியல் கட்சிகள்

இனவாதக் கொந்தளிப்பினால் அழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தீவை
மீட்டெடுப்பதற்கு சமாதானமும் நீதியான முறையில் பல்லின சமத்துவமும்
நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் செயலாற்றிய மூத்த அரசியல்
தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுடைய மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும் என சமத்துவக் கட்சி கட்சியின் தலைவர் முருகேசு
சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து
அவர் ஒருபோதும் விலகவோ தளரவோ இல்லை. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச்
சமூகத்தினருக்கும் சமனிலையான அதிகாரமும் உரிமையும் கிடைக்கக்கூடிய
அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார் என்றும் குறிப்பிட்டள்ளார்.

செய்தி – சுழியன்

இரா.சம்மந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ
வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சி இரங்கலை வெளியிட்டுள்ளது.

எதிர்கால தாயக பிராந்திய சர்வதேச அரசியல் விவகாரங்களை
கையாளுகின்றபோது தமிழினத்திற்கு பெரும் பின்னடைவுகளை உருவாக்கும்.
நிலைமைகளை கருத்தில்கொண்டு அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒன்றினைவதே
இரா சம்மந்தருக்கு நாம் ஆற்றுகின்ற அஞ்சலியாகும் எனவும் குறிப்பிடடுள்ளனர்.

 செய்தி – எரிமலை

ஜனநாயகப் போராளிகள் கட்சி

இரா.சம்பந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ
வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது அதனை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை
தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்
பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய உடன்படிக்கையில் வடகிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தையும்,
அவசியத்தையும் காத்திரமாக இந்திய பிரதமருக்கு வலியுறுத்தி அவ்விடயத்தினை
ஒப்பந்தத்தில் இடம்பெற செய்த வரலாற்று கடமையினை ஆற்றியவர்
இரா.சம்பந்தரே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி – குமார்

ஈரோஸ் ஜனநாயக முன்னணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுநிலைத் தலைவராகவும் திருக்கோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய இரா.சம்பந்தன் அவர்களது இழப்பால்
துயருற்றிருக்கும் கும்பத்தினருடனும் அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும்
ஆதரவாளர்களுடனும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது தனது துயரினைப் பகிர்கின்றது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் என பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எமது மக்களது விடுதலைப் போராட்டமானது இன ரீதியான முனைப்புக் கொண்டபோது போராட்ட
விடுதலை அமைப்புகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழகத்திலே தமது தளங்களை
அமைத்துச் செயற்பட்டபோதிலிருந்து இரா. சம்பந்தன் அவர்கள் ஈரோஸ் அமைப்புடன்
தொடர்புகளைப் பேணியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

“1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் 1989 ஆம் ஆண்டு
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே ஈரோஸ் போட்டியிட்ட போது தமிழர் விடுதலைக்
கூட்டணியில் இரா.சம்பந்தன் அவர்கள் திருக்கோணமலை மாவட்டத்தில்
போட்டியிட்டிருந்தார்.

அத்தேர்தலின் போது அவர் ஈரோஸ் அமைப்புடன் நெருங்கிய உறவினை பேணியிருந்தார்
என்பதனை இவ்விடத்தில் நினைவு கூருகின்றோம்.

பௌத்த சிங்கள இனவாத அரசுகள் தொடர்ந்தும் தமிழ்பேசும் குமுகாயங்களின்
சிக்கல்களுக்குத் தீர்வினை வழங்க முன்வராத நிலையில் “என்னவகையிலான விட்டுக்
கொடுப்புகளையாவது செய்து இனமுரண் நிலைக்கான தீர்வினை எய்துவதற்காக உழைத்த
தலைவராக இரா.சம்பந்தனை ஈரோஸ் ஜனநாயக முன்னணி பார்க்கின்றது என கூறியுள்ளார்.


NO COMMENTS

Exit mobile version