Home இலங்கை அரசியல் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் வரும் வியாழன் ஆரம்பம்: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் வரும் வியாழன் ஆரம்பம்: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு

0

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை
ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
அறிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம், ‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில்
முன்னெடுக்கப்படவுள்ளதோடு அங்குரார்ப்பண நிகழ்வு காலை 10 மணிக்குச் சுகததாச
மைதானத்தில் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த தேசிய சபை, மாவட்ட சபைகள், பிராந்திய
சபைகள் மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகள்
ஒன்றிணைந்து ஆதரவளிக்கும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு
ஒன்றிணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் தரவு

இதேவேளை, பொலிஸாரின் தரவுகளின் பிரகாரம், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகள் மூலம் ஆயிரத்து 482 கிலோ 820 கிராம் ஹெரோயின் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதோடு, 59 ஆயிரத்து 243 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 542 கிலோ 454 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 67
ஆயிரத்து 762 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 582 கிலோ 136
கிராம் ஹஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டு ஆயிரத்து 444 கைதுகளும் இடம்பெற்றுள்ளன.

14 ஆயிரத்து 434 கிலோ 468 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 59
ஆயிரத்து 482 கைதுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 32 கிலோ 642 கிராம் கொகைன் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 86 நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 39, ஆயிரத்து 617 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அவற்றை
விநியோகித்த 2 ஆயிரத்து 921 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version