சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள் பிடிப்பதில் தாமதம் என்ற
மக்களின் அதிருப்தியை நாம் ஏற்கின்றோம், சட்டத்தின் பிரகாரம் அனைத்து
கள்வர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்
இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கட்சியால் பதவி வழங்கப்படும்
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியினர் பதவி, பட்டங்களுக்காக அரசியல் செய்யும் நபர்கள்
கிடையாது. எவரும் பதவிகளைக் கேட்டுப் பெறுவதில்லை. கட்சியால் பதவிகள்
கையளிக்கப்படும். அந்த பொறுப்பு சரியாக நிறைவேற்றப்படும்.
அதற்காக
அர்ப்பணிப்புடன் தோழர்கள் செயற்படுவார்கள்.
தேசிய மக்கள் சக்தியினருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கியும்,
கள்வர்களைப் பிடிப்பதில் அவர்கள் வேகம் காட்டவில்லை, கள்வர்களைச் சிறையில்
அடைக்கவில்லை என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ளது.
சட்டம் உரிய வகையில் செயற்படுகிறது
அதனை நாம் ஏற்கின்றோம்.
நாம் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. கியூபா மற்றும்
வடகொரியாவில் நடந்ததைப் போன்றும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஜனநாயகம், சட்டம்
மற்றும் அரசமைப்பின் பிரகாரமே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது.
எனவே, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே செயற்பட வேண்டியுள்ளது. அதன்
பிரகாரம் நாம் செயற்பட்டு வருகின்றோம். மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல,
பிரசன்ன ரணவீர உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ளனர்.
சட்டம் உரிய வகையில்
செயற்பட்டு வருகின்றது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும். அனைத்து
கள்வர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
