தேசியப் பட்டியல் விவகாரம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிறுபான்மைக் கட்சிகள் விலகிச் செல்லும் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்ட சிறுபான்மைக் கட்சிகளுக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மொத்தமே ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களே கிடைத்துள்ள நிலையில், அதனைப் பங்கிட்டுக் கொள்வதில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்குள் குழப்பம்
கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ஐந்து தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய நான்கு எம்.பி பதவிகளுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகளாக செயற்படுகின்றன.
தேசியப்பட்டியல்
கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி எம்.பி பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அக்கட்சியில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட எம்.பி.க்களை தேசியப்பட்டியலில் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகப் போட்டியிட்ட ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படவில்லை.
ஆனால், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரே அதே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
அவ்வாறான நிலை இம்முறையும் ஏற்படக் கூடாது என்பதில் சிறுபான்மைக் கட்சிகள் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது