ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவு வழங்கும் தீர்மானத்திலேயே, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) இருந்தார்.இதை,எம்மிடம் பலமுறை அவர் குறிப்பிட்டார். ஆனால் கட்சியின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள், இறுதி தருணத்தில் அவரை தவறாக வழிநடத்தினர். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தேர்தலில் படுதோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
இவ்வாறு ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(sb dissanayake), தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (26) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பரந்துபட்ட அரசியல் கூட்டணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில், பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அறிவிப்போம்.
பொதுத்தேர்தலில் போட்டி
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும், பிரதமருமான தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்படும்.இந்த கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்.
கட்சியிலிருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்