இந்தியாவின்(India) பாதுகாப்பிற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நோக்கத்திற்கும் இலங்கை பிரதேசம் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ள நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,
“வெளியுறவுக் கொள்கை எங்கள் பாதை வரைபடமாக மாறுகிறது.
நாங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
எங்கள் இருதரப்பு விவாதங்களின் தற்போதைய நிலையை விரிவாக மதிப்பாய்வு செய்தோம், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவளித்ததற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் நான் நன்றி தெரிவித்தேன்.
பிரதமர் மோடி
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப நமது நாட்டின் பொருளாதார செயல்முறை மற்றும் நிலையான பொருளாதார நிலைக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகின்றேன்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நோக்கத்திற்கும் இலங்கை பிரதேசம் பயன்படுத்தப்படாது என்ற எனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடல்
இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜனாதிபதி அலுவலகத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதற்காக, இலங்கை அரசின் சார்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவும், இந்திய அரசின் சார்பாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
