Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – அதிகாரிகளுக்கு பிரதமர் அழுத்தம்

0

ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த ஆண்டு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் ‘நெலும் பியஸ’ மண்டபத்தில் நடைபெற்ற இடம்பெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்குப் பயனுள்ள வகையில் வளங்களைப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கம் பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு, 2026 ஆம் ஆண்டில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஏனைய அரச உத்தியோகத்தர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சுகளிடமிருந்தும் மாகாண மட்டத்திலிருந்தும் சிறந்த ஒத்துழைப்பு அவசியமாகும்.

தேசிய – மாகாண வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகள்.

அந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் உயர்தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

ஆசிரியர் இடமாற்றம்

எனவே ஆசிரியர்களை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும், அதிகாரிகளை நியமிக்கும் போதும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம்.

ஏனைய மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகள் பற்றியும் சிந்தித்து, அனைவரையும் சமமாக நடத்துங்கள்.

நீங்கள் உண்மையான திறமைசாலிகள்.

இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, மீண்டும் வடக்கு மாகாணத்திற்குச் சேவையாற்ற வருவீர்கள் என நான் நம்புகிறேன்.

மூன்று நான்கு வருடங்களில் தீர்மானம்

இன்னும் மூன்று நான்கு வருடங்களில் வடக்குப் பிரதேசம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பவர்கள் நீங்களே.

அப்போது நீங்கள் வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தித்து செயற்படுவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஓர் அரசாங்கமாக நாங்கள் இந்தத் தலையீட்டை மேற்கொள்வது அந்த முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டே என்பதைக் கூற வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version