அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்திருந்தது.
அமைதி காலம்
அதன்படி நேற்று (18) நள்ளிரவு 12.00 மணி முதல் தேர்தல் நடைபெறும் 21 சனிக்கிழமை வரையிலான காலப்பகுதி “அமைதி காலமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியில் தேர்தல் ஒழுங்குபடுத்தல்களுக்காக அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு தொடக்கம் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான அமைதி காலப்பகுதியில் எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 21 ஆம் திகதி போன்று 22 ஆம் திகதியும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி. குணசிறி தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20ஆம் திகதி மூடப்படும் எனவும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.