உக்ரைன் (Ukraine), நைஜீரிய (Nigeria), பல்கேரிய (Bulgaria) மற்றும் இந்திய பிரஜைகள் இணையம் ஊடாக அதிநவீனமான முறையில் இந்த நாட்டிற்கு வந்து மேற்கொள்ளும் பாரிய பண மோசடிகளானது ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வெளிநாட்டுப் பிரஜைகள் சமூக ஊடகங்கள் ஊடாக தம்மை ஒழுங்கமைத்து இணையத்தளத்தின் ஊடாக சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த சந்தேகநபர்கள் செய்த குற்றமானது நாட்டிலுள்ள வங்கி முறைமையையும் கணக்கு வைத்திருப்பவர்களையும் ஊக்கப்படுத்தும் செயலாகும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு (Colombo) பிரதான நீதவான் திலின கமகேவிடம் (Dilina Gamage) அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
பாரிய பண மோசடி
அத்தோடு, குறித்த மோசடி தொடர்பில் உக்ரைனைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இணையம் ஊடாக பண மோசடிகளை செய்வதற்கு அவர்களுக்கு உதவிய நாட்டிலுள்ள சகல நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.