மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று முன்னைய அரசுகளை வற்புறுத்திய தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்த நிலையில் போர் இல்லாத போது பாதுகாப்புச் செலவை அதிகரித்தது ஏன் என்று
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
கல்வியை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை
கல்விக்காக அரசாங்கம் 271 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அதேவேளை, பாதுகாப்பிற்காக 614 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 76 பில்லியன் ரூபாவாகும் .
அதேவேளை கல்விக்கான மூலதனச் செலவு 65 பில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அவர், கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 6% மற்றும் 3% ஒதுக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் அண்மையில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தியது.
வற் வரியை நீக்க வேண்டும், பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், புத்தகங்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.