மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் பந்துல கருணாரத்ன, குறித்த பதவிக்குப் பொருத்தமற்றவர் என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஶ்ரீலங்கா கிரிக்கட் சபையின் நிர்வாகத்தைக் கலைத்து , இடைக்கால நிர்வாகமொன்றை நியமித்தமை தொடர்பான வழக்கில் நீதியரசர் பந்துல கருணாரத்னவின் செயற்பாடு விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.
இடைக்காலத் தடை உத்தரவு
குறித்த இடைக்கால நிர்வாக சபைக்கு எதிராக ஷம்மி சில்வா முன்வைத்த கோரிக்கையை ஏற்று பந்துல கருணாரத்ன உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் குறித்த வழக்கில் தனக்கு விருப்பமான முறையில் நீதிபதிகளை நியமனம் செய்திருந்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதன் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதமளவில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை உச்சநீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த போது, மேற்குறித்த வழக்கை காரணம் காட்டி அவரது நியமனத்தை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இவ்வாறான நிலையில் நீதியரசர் பந்துல கருணாரத்னவை கௌரவமான முறையில் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும் அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனுவில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.