யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் முகப்புத்தக கருத்து தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, வைத்தியர் அர்ச்சுனாவின் கருத்துக்கள் தொடர்பில் சிஐடி விசாரிக்க வேண்டும் என்று இந்த முறைப்பாடு வலியுறுத்துவதாகவும் ஆனால் விசாரணைகள் தொடங்கப்படவில்லை என்பதை தல்துவ உறுதிபடுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சர்ச்சைகள்
இந்த வாரத்திற்குள் இதை சரியாகப் பார்க்க வேண்டும் என்று பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்ததாகவும், முறைப்பாடு சிஐடி இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இராமநாதன் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி வெளியானதை அடுத்து, பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
நாடாளுமன்ற ஊழியர்கள் கோரிக்கை விடுத்தும் அவர் எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இருந்து நகர மறுத்தார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறும் காணொளியொன்றை வைத்தியர் அர்ச்சுனா சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் சட்ட மீறல்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வைத்தியர் அர்ச்சுனா தனது முகநூல் பக்கத்தில், “இலங்கை ஊடகங்கள் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்க விரும்புகின்றன என்று நான் நம்புகிறேன், அதனால்தான் நான் நேரடி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக வைத்தியர் அரச்சுனா தொடர்ந்தும் சர்ச்சையை சந்தித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அவர் தனது அரசாங்க மருத்துவ அதிகாரி பதவியை விட்டு விலக தவறியதாகக் கூறி, பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளன.
எவ்வாறாயினும், சுயேட்சையாகப் போட்டியிட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.