அண்மைக் காலமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் மாறுபட்டதாகவே காணப்படுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த சில நாட்களாக விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஆகியோரின் கூற்றுக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவே காணப்படுகின்றது.
மக்களின் நம்பிக்கை
இவ்வாறான நிலையில் இவர்களினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியானது (NPP) சில காரணிகளை முன்வைத்தே மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள எண்ணுகின்றது.
அதாவது அரசியல் வரப்பிரசாதங்களை இல்லாது செய்தல் மற்றொன்று கள்வர்களை கைது செய்தல் போன்ற விடயங்களையே முன்னிறுத்தியுள்ளனர்.
இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தியே நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தது.
பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் ஆகிய துறைகளில் நிலவும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வினை முன்வைக்கவில்லை.” என்றார்.