பாதாள உலகக்குழுவினர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, அவரின் குடும்பத்திற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாமல் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த குற்றக்கும்பலுக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவித்து சமகால அரசாங்கம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் என நாமல் தெரிவித்திருந்தார்.
நாமல் ராஜபக்சவின் மனசாட்சி
இந்நிலையில் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்களுடன் ஏதேனும் தொடர்பு இருந்தால், நாமல் ராஜபக்சவின் மனசாட்சி அதை நன்கு அறிந்திருக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சாதாரண கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் பொலிஸார் செயல்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் மூலம் தகவல் வெளிப்படுவதற்கு முன்பு அதனை அறிக்கையை வெளியிடுவது கேள்விக்குறியாக உள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
