Home இலங்கை அரசியல் கொழும்பில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் மந்திராலோசனை நடத்திய நாமல்

கொழும்பில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் மந்திராலோசனை நடத்திய நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் மட்டம் பரபரப்பாகி உள்ளது.

இந்நிலையில் அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ராஜபக்சர்கள் ஆட்சியை பிடிக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் வீட்டில் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அரசியல் நிலைமை

நாரஹேன்பிட்டியிலுள்ள இல்லத்திற்கு நேற்று முன்தினம் அவர் விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜி.எல். பீரிஸின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ச அங்கு சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், சனிக்கிழமை மாலை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழு ஒன்று ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்கு சென்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது, மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாமல் ராஜபக்ச சிறப்பாக பதிலளித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட விவாதம்

மேலும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பை எவ்வாறு பெறுவது மற்றும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான அவர்களின் திட்டங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ச நீண்ட நேரம் விவாதித்ததாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தி அடைந்துள்ள எதிர்க்கட்சியினர் கூட்டாக ஒன்றிணைந்து, அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version