Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக சம்மாந்துறைச் சேர்ந்த நசீர் நியமனம்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக சம்மாந்துறைச் சேர்ந்த நசீர் நியமனம்

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, காணி நிர்வாகம், மீன்பிடி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.நசீர் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தையுடைய இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இவர் நேற்று முன்தினம்(12) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை 

29 வருட இலங்கை நிருவாக சேவை அனுபவம் கொண்ட இவர், லாகுகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராகவும், சம்மாந்துறை, இறக்காமம், கல்முனை, பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட உதவி வறுமை நிவாரண ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், பொது நிர்வாக அமைச்சு, வன ஜீவராசிகள் அமைச்சு, வட மத்திய மாகாண அமைச்சு போன்றவற்றின் மேலதிக செயலாளராகவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) போன்ற பல
பதவிகளையும் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த பைஷல் ஆப்தீன் நியமிக்கப்பட்டு அவரும் நேற்று முன்தினம் கடமையேற்றுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version