தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எட்டப்படும் இணக்கப்பாடானது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலானதாக இருக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் சி.இரத்தினவடிவேல் கடந்த வெள்ளிக்கிழமை (03) ப.சத்தியலிங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.
அக்கடிதத்தில், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் (Gajendrakumar Ponnambalam) முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் அவரை முன்னிலைப்படுத்துவதையும், தமிழரசுக்கட்சியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட உபாயம் மாத்திரமே எனவும், ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவருடன் சிறீதரன் (S. Shritharan) மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ, கட்சிக்கோ உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினை
இந்த நிலையில் இதுகுறித்து சத்தியலிங்கம் தெரிவிக்கையில், “தமிழர் பிரச்சினை என்று வருகிறபோது அது பொதுவானதொரு விடயமாகும். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல தமிழ்த்தரப்புக்களும் ஒன்றிணைந்து தான் செயற்படவேண்டும். அதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து செயற்படுவதை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை வரவேற்கின்றோம், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருக்கின்றோம்.
இருப்பினும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் ஒன்றிணைந்து தீர்மானிக்கமுடியாது.
புதிய முன்மொழிவு
எனவே இவ்விடயத்தில் எட்டப்படும் இணக்கப்பாடு என்பது தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலானதாக அன்றி, தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடாக இருக்கவேண்டும்.
இங்கு தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பகடைக்காயாக்க முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருக்கின்றன.
எனவே அவையனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, எமது அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விலகாமல், தற்கால சூழலுக்கு ஏற்றவாறான புதிய முன்மொழிவொன்றை ஒருமித்துத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளிக்கவேண்டும்“ என தெரிவித்தார்.