அரசாங்கத்தின் குறைகளைக்
சுட்டிக்காட்டுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக என்னை
அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில் இந்த அச்சுறுத்தல்களால் அடிபணியப் போவதில்லை என்பதை அரசாங்கத்திடம்
தெரிவித்துக் கொள்கின்றேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்
மேலும் தெரிவிக்கையில், “பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்
தொடர்பான உண்மையை அரசு இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.
இந்தக் கொள்கலன்களை
விடுவிப்பதற்குத் தான் பணித்ததாக கப்பல் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க
குறிப்பிட்டிருந்தார்.
சுங்கத் திணைக்களம் கப்பல் துறை அமைச்சின் விடயதானங்களுக்குள் உள்ளடங்காது.
ஜனாதிபதியின் வசமுள்ள நிதி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும்.
ஆகவே,
அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டவிரோதமான முறையில் இந்தக் கொள்கலன்களை
விடுவிப்பதற்குப் பணித்துள்ளார்.
ஆகவே, அவரை உடன் கைது செய்து விசாரிக்குமாறு
குறிப்பிட்டேன்.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் குறித்து நான் குறிப்பிட்ட
விடயங்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்கள்.
சட்டவிரோதமாகச்
செயற்பட்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து விசாரணை செய்வதை
விடுத்து என் மீது முறைப்பாடு அளிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
அரசின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதால்
இந்தக் கொள்கலன்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம்
சுங்கத் திணைக்களத்திடம் முன்வைத்த கேள்விகளுக்குச் சுங்கத் திணைக்களம்
‘தாங்கள் கோரிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குரிய ஆவணங்கள் தற்போது சுங்கத்
திணைக்களத்திடம் இல்லை’ என்று எனக்குப் பதிலளித்துள்ளது.
தற்போது இல்லையாயின்
ஆரம்பத்தில் அந்த ஆவணங்கள் இருந்துள்ளன.
தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளன
என்றே கருத வேண்டும்.
அரசின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
ஊடாக என்னை அச்சுறுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது.
அச்சம் என்பதொன்று
இருக்குமானால் இந்த அரசுடன் நான் மோதியிருக்க மாட்டேன் என்பதை ஜனாதிபதியிடமும்
அரசிடமும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
