எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயாளர்களின் நலன் கருதி பருத்தித்துறை
(மந்திகை) ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிப்பதற்கான
நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் தொற்று
நோய் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
காணப்படுகின்றது.
நோயாளர்கள், விடுதிகளின் கட்டில்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவதால்
தரையில் இருந்து சிகிச்சை பெரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பரவும் நோய்கள்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமையால் டெங்கு மற்றும்
உண்ணிக் காய்ச்சல் தாக்கத்துடன் தற்போது புதிதாக எலிக்காய்ச்சல் என மூன்று வகை
நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில்
எலிக்காய்ச்சலின் தாக்கத்தால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில்
பெரும்பாலானவர்கள் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இதன்காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்
செய்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா, வைத்தியசாலையின் நிலைமைகளை நேரில்
ஆராய்ந்ததுடன் விடுதிகளில் தங்கி இருந்த நோயாளர்களையும் பார்வையிட்டார்.
குறிப்பாக மருத்துவ சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சலின் தாக்கத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப்
பெரும் எண்ணிக்கையான நோயாளர்கள் அங்கு மருத்துவ சிகிச்சை விடுதிகளில்
கட்டில்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாகக் காணப்படுவதையும், அவர்கள் தரையில்
இருந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதனையும் காணக்கூடியதாக இருந்தது.
உடன் நடவடிக்கை
எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா,
உடனடியாக வைத்தியசாலையின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி புதிய மருத்துவ
சிகிச்சைப் பிரிவு அலகு ஒன்றினை உருவாக்கி அதனுடாக நோயாளர்களுக்குச்
சிகிச்சையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்
வை.திவாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவுக்கு எடுத்துரைக்கையில்
புதிய அலகொன்றை ஆரம்பிப்பதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது என்றும், அதனை
நிவர்த்தி செய்து தரும் பட்சத்தில் புதிய அலகைத் திறக்க முடியும் என்றும்
தெரிவித்தார்.
இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்
சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலை நிர்வாகத்தினருடன் உடனடியாகக்
கலந்துரையாடலில் ஈடுபட்டு அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.
குறிப்பாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான ஆய்வு கூட
தொழில்நுட்பவியலாளர் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை தற்காலிகமாக
நிவர்த்தி செய்து தருவதாக அவர் உறுதியளித்ததன் பிரகாரம் புதிய மருத்துவ
சிகிச்சை அலகை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
மேலும், இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மக்கள்
மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் மேலும் கலந்துரையாடல்
இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய
அத்தியட்சகர் வைத்தியர் வை.திவாகரன் மற்றும் வைத்திய அதிகாரிகள் எனப் பலர்
கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உடனடியாக
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய
அதிகாரிகளுடன் கலந்துரையாடி எலிக்காய்ச்சலின் நோய்த் தாக்கத்தைக்
கட்டுப்படுத்தும் நடவடிக்கையையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அத்துடன், தற்போது யாழ்ப்பாணத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சல் தொடர்பான
ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளது.