Courtesy: Sivaa Mayuri
இலங்கையிலுள்ள சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத ஐந்து பாலூட்டிகளில் டோக் குரங்கு இனமும் ஒன்று என்பதை மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் ஜகத் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குள் அத்துமீறி நுழையும் பாதுகாக்கப்படாத விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுவதாக அவர் ஊடகம் ஒன்றிடம் நியாயப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, குரங்குகளின் எண்ணிக்கையை நிர்வகிக்க விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
பாதுகாக்கப்பட்ட இனங்கள்
எனினும் குணவர்தன இந்தக் கூற்றுக்களை நிராகரித்தார், யானைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட இனங்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவது தொடர்பிலேயே சூழலியலாளர்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர்; சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் உண்மையான பிரச்சனையில் இருந்து, கவனத்தை திசை திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயமான முறையே கையாளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டோக் குரங்கினம் உலகில் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்தாலும், இலங்கையில், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்படாத ஐந்து பாலூட்டிகளில் டோக் குரங்குகள், சாம்பல் லாங்கூர் குரங்குகள், காட்டுப்பன்றி, கரும்புலி முயல் மற்றும் முள்ளம்பன்றி ஆகியவை அடங்கும் என்று சூழலியலாளர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆகவே தங்கள் நிலங்களுக்குள் அத்துமீறி நுழையும் பாதுகாக்கப்படாத விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு விவசாயிகள், உரிமைகளுக்கு உட்பட்டவர்கள் என்றும் குணவர்தன தெளிவுபடுத்தினார்.