எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.
பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
இளம் தலைமுறையினர்
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருப்பின், 2022ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவின் பிரகாரம் குறித்த தேர்தல் நடைபெற்றிருக்கும்.
அதன் காரணமாக, கடந்த 2024ஆம் ஆண்டில் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்ற 4 லட்சத்து ஐம்பதினாயிரம் பேருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருக்கும்.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் குறைந்த பட்சம் இளம் தலைமுறையினருக்கு 25% சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ரோஹண ஹெட்டியாரச்சி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.