Home இலங்கை அரசியல் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள்! சுருக்க விபரம் வெளியீடு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள்! சுருக்க விபரம் வெளியீடு

0

கடந்த செப்டெம்பர் மாதம் கலைக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்த சாராம்ச அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் 2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி 1ஆவது அமர்வில் ஆரம்பமான ஒன்பதாவது நாடாளுமன்றம்,  2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்ட து.

9ஆவது நாடாளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66ஆவது உறுப்புரைக்கு அமைய 19 நாடாளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டதுடன், இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

உறுப்புரிமையை இழப்பு

இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததுடன், இவருக்குப் பதிலாக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

அத்துடன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதேபோன்று, முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

எனினும், ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் 

மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த 9ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டமையாகும்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன், 9ஆவது நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் 4 தடவைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், 3ஆவது மற்றும் 4ஆவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 390 நாட்கள்

இதற்கமைய 9ஆவது நாடாளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன.

2020ம் ஆண்டு 08ம் மாதம் 20ம் திகதி முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும், 2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும், 2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும், 2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும், 2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன.

இந்த ஐந்து கூட்டத்தொடர்களிலுமாக 9ஆவது நாடாளுமன்றம் மொத்தம் 390 நாட்கள் கூடியிருந்தன என்றவாறாக கலைக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்த சாராம்சத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version