Home இலங்கை அரசியல் அடுத்த 4 வருடங்களுக்கு தேர்தல் இல்லை : வெளியான அறிவிப்பு

அடுத்த 4 வருடங்களுக்கு தேர்தல் இல்லை : வெளியான அறிவிப்பு

0

எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேர்தல்களில் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு கட்டாயமாக்கப்படும் என்றும், வாக்களிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு செலவாகும் பெரும் நிதி

2026 – 2029 காலப்பகுதிக்கான தேசிய தேர்தல் ஆணையத்தின் மூலோபாய வேலைத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் குருநாகல் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவாகும் பெரும் நிதியை கருத்தில் கொண்டு, தேர்தல்களில் அதிகபட்ச பலனை பெறும் நோக்குடன் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டிய கட்டுப் பணத் தொகையை உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நாட்டில் சுயாதீன ஜனநாயக வாக்களிப்பு சக்தியை பாதுகாப்பதே எங்கள் திணைக்களத்தின் கனவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்குவது 

அந்த கனவை யதார்த்தமாக மாற்ற இப்போது உள்ள காலத்தை சீராக பயன்படுத்தி தேவையான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அதற்காகவே உங்கள் கருத்துகளை கேட்க இங்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் எதிர்கால தேர்தல்களுக்காக புதிய சட்டங்களை உருவாக்குவது மிக அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளதால் அவை எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் என்பது முற்றிலும் சட்டப்படி நடைபெறும் செயற்பாடாகும். எனவே சட்டமாற்றங்கள் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை இப்போது கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கத்துக்கு நாங்கள் ஏற்கனவே 42 சட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளோம். அவை அனைத்தும் சட்டரீதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version