பிரிட்டனில் உள்ள Royal Military Academy Sandhurst இல் தனது பயிற்சியை முடித்து அண்மையில் பட்டம் பெற்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கடற் மொஹமட் அனீக் (Mohammed Aneek )காணாமற்போன நிலையில் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரி அனீக் கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் காணாமல் போனதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதவி உயர்த்தப்பட்ட அதிகாரி
44 வார தீவிர பயிற்சித் திட்டத்திற்கு உட்பட்ட அனீக், அதிகாரிகளுக்கான பயிற்சியின் முடிவைக் குறிப்பதான ஓகஸ்ட் 9 அன்று நடைபெற்ற அணிவகுப்பின் போது இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
தனிப்பட்ட முறையில் வாழ்த்து
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகித போகொல்லாகமவும்(Rohitha Bogollagama )அனீக்கிற்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி அக்கடமியை காலி செய்துவிட்டு, அனீக் இலங்கை திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அவர் மறுநாள் இலங்கைக்குத் திரும்பவிருந்த விமானத்தை தவறவிட்டார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விமான நிலையத்திற்கு போக்குவரத்து வசதியை வழங்கியபோது, அனீக் தனது சொந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி இலங்கை திரும்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, அனீக் எங்கிருக்கிறார் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.
சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அவர் காணாமல் போனமை குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்தில் வசிக்கும் அனீக்கின் பல உறவினர்கள் அவரது விழாவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் சிறிலங்கா இராணுவம் சர்வதேச இராணுவப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பதில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.