ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) தெரிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீர்மானிக்கும் அதிகாரம்
இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது எனவும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு குறித்து அவசியமான உத்தரவுகளை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டங்கள்
இதுவரை 500 தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடாளவிய ரீதியில் இடம்பெற்றுள்ள நிலையில் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை என கூறியுள்ளார்.
நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.