சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது சட்டரீதியாக தலைவர் ஒருவர் இல்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா சட்டத்துக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் நெருக்கடி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், துமிந்த திஸாநாயக்க கட்சியின் பொதுச்செயலாளராகவும் (Duminda Dissanayake) தெரிவு செய்யப்பட்டார்.
இது தொடர்பான அறிவிப்பு கட்சியின் செயற்குழுவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், குறித்த இருவரினதும் நியமனம் சட்டவிரோதமானது.
சட்டவிரோத நியமனம்
சிறிலங்கா சுதந்திக் கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.
இந்த சட்டவிரோத நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், கட்சியில் தற்போதுள்ள அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுடன் இணைய நடவடிக்கை எடுக்காது, சுதந்திர கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில், தலைவர்களாக கூறப்படும் இரண்டு தரப்பையும் நான் ஆதரிக்க போவதில்லை.
கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகும் வரை கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.