Home இலங்கை அரசியல் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

13ஆவது திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட அவசியமில்லை! அநுர அரசு

0

இலங்கையின் அரசியமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்து தெளிவூட்டும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(20) இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியமைப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், ” அரசியமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அதனடிப்படையில் அடுத்த வருட முற்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் அல்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பில் நாடாளுமன்ற அனுமதி பெறப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும், மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும். எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. 

13 ஆவது திருத்தச் சட்டம் 

அது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மீள்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவுடனான கூட்டு அறிக்கையில் தகவல் வெளியிடப்படவில்லை. 

ஏனென்றால் அவ்வாறு கலந்துரையாடுவதற்கான தேவை கிடையாது. அரசு என்ற வகையில் அரசமைப்பின் பிரகாரம் நாம் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version