Home இலங்கை அரசியல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரவு செலவுத் திட்டம் : சஜித் பகிரங்கம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரவு செலவுத் திட்டம் : சஜித் பகிரங்கம்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமோ, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் கடன் பொறிக்கோ தீர்வுகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச சேவையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றனர், ஆனால் வரவு செலவுத் திட்டம் அவ்வாறில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். 

 தேர்தல் விஞ்ஞாபனம்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நாம் ஆராய வேண்டும்.

நாடு அநுரவிற்கு என்று அதிகாரத்தை வழங்கினாலும், நாடு ஐ.எம்.எப்பிற்கு (IMF) வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குட்பட்டு வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமோ, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் கடன் பொறிக்கோ தீர்வுகள் இல்லை.

விவசாயம், கடற்றொழில் துறை, தோட்ட கைத்தொழில் துறையினர் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

வரவு செலவுத் திட்டம்

புதிய கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் மேடையில் கூறியிருந்த போதும், அவர் நேரடியாகவே சர்வதேச நாணய நிதியத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி வருகின்றார்.

ஆட்சிக்கு வந்ததும் ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினாலும், அதற்கு மாற்றமாகவே ஜனாதிபதி இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார்.

அரச சேவையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றனர், ஆனால் இறுதியில் 3 வருடங்களில் சொற்ப தொகையே சம்பளம் உயர்த்தப்படுகின்றது.

இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதாது. தனியார் துறையினருக்கு மாற்றாந்தாய் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/so6IxBmXn04

NO COMMENTS

Exit mobile version