வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய
அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று(05.01.2025) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்கில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக கலந்துரையாடியுள்ளோம்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல்
இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்
கலந்துரையாடினோம்.
அத்துடன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில்
பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்
இடம்பெற்றன.
முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக
தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும்.
எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் கலந்துரையாடி அவர்களும்
இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற
தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
அதற்கு முன்னதாக மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும்
தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.