Home இலங்கை அரசியல் யாழ் – குருநகர் துறைமுகம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வழங்கிய வாக்குறுதி!

யாழ் – குருநகர் துறைமுகம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வழங்கிய வாக்குறுதி!

0

யாழ். குருநகர் பிரதேசத்தில் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக
கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று(01.12.2024) காலை
நடைபெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே
ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குருநகர் துறைமுகம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள்.

இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான்
பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன்.

அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா.சுதர்சன்
இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார்.

கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இ.சந்திரசேகர் ,
எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். 

கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம்
அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யபட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன்
தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்.

கடற்றொழிலாளர்கள் 

எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

நீங்கள் இன்று(01) ஓய்வுபெற்ற கடற்றொழிலாளர்களை கௌரவிக்கின்றீர்கள். அது
பாராட்டப்பட வேண்டிய விடயம். 

இவ்வாறான உதவிகளைச் செய்வது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தேவையானது என்பதுடன் இந்தப் பிரதேசத்தின்  கடற்றொழிலாளர்களின்
தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் பணியாற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில்
நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version