Home இலங்கை அரசியல் அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை

அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை

0

எட்கா (ETCA) ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.

எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையில் பிரதான சில விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகள் 

எட்கா, மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. இவை இதற்கு முன்னரும் பல்வேறு அரசாங்கங்களால் அவதானம் செலுத்தப்பட்ட ஒரு காரணியாகும்.

ஆனால் அநுரகுமார திசாநாயக்க அந்த பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் சென்று பதிலளித்துள்ளார். மகிந்த (Mahinda), மைத்திரி (Maithri), கோட்டா (Gotabaya) மற்றும் ரணில் (Ranil) அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் விரைவாகச் செல்வதாகவே தோன்றுகிறது.

தேர்தலுக்கு முன்னர் எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட பிரதான தரப்பு தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணி  (JVP) ஆகும். தற்போது இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. ஆனால் மக்களிடம் அதனை மறைக்கின்றனர்.

மக்களிடம் மன்னிப்பு கோருதல் 

எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதானால் அதனை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று அன்று இவற்றை எதிர்த்து விட்டு, தற்போது சரியென ஏற்றுக் கொள்வார்களானால் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அன்று மக்களை நாம் ஏமாற்றி விட்டோம். ஆனால் இதுவே யதார்த்தம் என்பதை அரசாங்கம் நாட்டுக்கு கூற வேண்டும்“ என தெரிவித்தார்.

 

NO COMMENTS

Exit mobile version